முருகேஷ் அண்ணன் எங்களைப் போலவே ஒரு பொறியியல் பட்டதாரி. பழவந்தாங்கலில் நான் தங்கியிருந்த எட்டுபேர் கொண்ட பேச்சிலர் அறையில் பிற ஏழுபேரும் ஐடியில் வேலைபார்க்க அவர்மட்டும் இன்னதென்று தெளிவாக சொல்லிவிட முடியாத தொழிலில் அப்போது இருந்தார்.
அவர் எந்த அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் பங்குச்சந்தை வணிகம், இவையே அவர் செய்துவந்த நடவடிக்கைகள். இணையத் தொடர்புடன் ஒரு மடிக்கணினியும் ஒரு கைபேசியும் மட்டுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. அவர் எந்த அலுவலகத்துக்கும் செல்லவில்லையெனினும் அறையில் இருப்பதிலேயே அவர்தான் மிகவும் பரபரப்பாகக் காணப்படுவார். குறிப்பாக காலை 9 மணிமுதல் 10 மணிவரை அவரது உச்ச நேரம். கைபேசியில் யாரிடமிருந்தோ ரயில் டிக்கெட் சார்ந்த தகவல்களை கேட்டபடிய்யோ அல்லது யாருக்கோ தகவல்களை சொல்லியபடியோ யாரையோ எதற்கோ அறிவுறுத்தியபடியோ காணப்படுவார்.
நாங்கள் இதையெல்லாம் பொறாமையுடன் கவனித்தபடியோ அல்லது கவனிக்காதவாறோ பாவனை செய்தபடி அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருப்போம். பொதுவாக ஐடியில் வேலைசெய்யும் அனைவருக்கும் தனது லட்சிய சுயதொழில் சார்ந்த பகற்கனவுகள் இருக்கும். அதுவும் திங்கட்கிழமை காலைகளில் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் எனும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது முருகேஷ் அண்ணன், நாம் அந்த பகற்கனவுகளில் காணும் லட்சிய உருவாகவே காட்சியளிப்பார்.
வெளியில் யாரேனும் கேட்டால் டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட் என்றும் நெருங்கியவர்களிடம் மட்டும் பங்கு வணிகம் குறித்தும் சொல்வார். உண்மையில் பெரும்பாலான வணிகர்களைப் போலவே அவருக்கு அக்காலத்தில் பங்கு வணிகத்திலிருந்து பெரிதாக வருமானம் ஏதும் வந்திருக்கவில்லை. ஒருவகையில் சந்தை குறித்து அவரும் கற்றுக்கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.
அவர்மூலம்தான் சந்தை குறித்த அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவரைச் சந்தித்த அனேகமாக முதல் வாரத்திலேயே அவரிடம் ’இது’ என்ன என கேட்க ஆரம்பித்திருந்தேன். ‘இது’ என்பது அவர் வினோதமாக திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் மின்னி மறையும் எண்களும் சிக்கலானது எனத் தோற்றமளிக்கக் கூடிய பல்வேறு வடிவங்கள் கொண்ட சார்ட்டுகளும். சந்தை இயங்கும் விதம் குறித்த அடிப்படையான புரிதல் சிறிது நாட்களில் உருவானது. முக்கியமான மூன்று அடிப்படை அறிதல்களை இங்கு சொல்கிறேன்:
அ) பெரும்பாலானோர் நினைப்பதுபோல சந்தை ஒருவகை சூதாட்டமோ, செல்வம் இறைக்கும் மந்திர பெட்டியோ அல்ல.
ஆ) அனைத்து தொழில்களையும் போலவே சந்தையில் வெற்றியடைவதற்கும் அந்த களம் குறித்த அறிதல், தொடர் ஈடுபாடு, தொடர் பயிற்சி ஆகியவை அவசியம்
இ) ஒட்டுமொத்தமாக சந்தை இயங்கும் விதத்திலிருந்து ஒரு தனிப்பட்ட வணிகம் இயங்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது.
அதன்பிறகு சந்தையை நாள்தோறும் தொடர்ந்ததும் இணையத்தில் அதுகுறித்து தேடித்தேடி வாசித்ததும் எனக்கே ஆச்சர்யமான விஷயங்கள். உள்ளூர நான் சந்தையை கவனிப்பவன் (வணிகம் செய்பவன் என்றல்ல) என்ற பிரக்ஞை உருவாகிவிட்டிருந்தது. ஒருவேளை எனது வேலைச்சூழல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சந்தை வசீகரிப்பதாய் இருந்து வந்துள்ளது என்றே நினைக்கிறேன். அது அளிக்கும் சவால்களால் சீண்டப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் களத்திற்கு வருவதைக் காண்கிறேன். நானும் அவ்வாறு சீண்டப்பட்டவனே. இதிலிருந்த விடுபட ஒரேவழிதான் உள்ளது. சந்தை அளிக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ளலாம், தவறில்லை. ஆனால் சந்தை மீதான முழுவெற்றி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற தன்னுணர்வும் எப்போதும் இருக்க வேண்டும்.
சந்தையின் இந்த வசீகரம் குறித்து அவ்வப்போது நானே அஞ்சுவதுண்டு. ஒருவேளை இதிலிருந்து எனக்கு மீட்பேயில்லையா என்றும் இது எனது வாழ்வையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறதா என்றும் சந்தேகிக்கும் தருணங்கள் உண்டு. இப்போதைக்கு என் புரிதல் என்னவென்றால் நாம் பூணும் வேடங்களை தெளிவாக பகுத்துக் கொள்வதொன்றே வழி. பங்கு சந்தை வியாபாரி எனும் எனதிந்த வேடம் முழுக்க முழுக்க லெளகீக தளம் சார்ந்தது. சந்தையின் ஆடல்கள் எத்தனை ஆழம் மிக்கதாய் தோற்றமளித்தாலும் நான் தேடுவதற்கோ அடைவதற்கோ இங்கு எதுவும் இல்லை. எனவே ஒருபோதும் என் அகம் சார்ந்த தேடல்கலையோ தேர்வகளையோ இத்தொழில் பாதிக்கலாகாது என்ற சுயபிரகடனத்தை கண்டிப்பாக இட்டுக் கொண்டுள்ளேன்.

No comments:
Post a Comment