Wednesday, May 9, 2018

முதலீடு X வர்த்தகம்

நமது சாத்தியங்களும் தேவைகளுமே நமக்கான இலக்கையும் பாதைகளையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் சந்தை குறித்த நமது எதிர்பார்ப்ப்புகள் என்ன அதை அடைவதற்கான சாத்தியங்கள் என்ன என்பதை வரையறுத்துக் கொள்வதன்மூலம் இந்த அமைப்பை நாம் அணுக வேண்டிய விதம் குறித்த தெளிவை அடையலாம். பங்குச் சந்தையில் நீங்கள் எது செய்வதாக இருப்பினும் அது முதலீடு (Investment) அல்லது வர்த்தகம் (Trade) என்ற இரு பிரிவுகளுக்குள்தான் வருகிறது.

ஊடகங்களில் சந்தை குறித்து வரும் செய்திகள் பெரும்பாலும் முதலீடு சார்ந்ததே. நீங்கள் அதைக் கொண்டு ஒரு பங்குச் சந்தை வர்த்தகனின் செயல்பாடுகளை சற்றும் புரிந்து கொள்ள முடியாது. வர்த்தகம் (Trading) சார்ந்த செய்திகள், அரட்டைகள் என்பது மிகக்குறுகிய வட்டத்தில் வணிகர்களிடையே மட்டும் நிகழ்வது. இதற்கென பிரத்யேகமான பிரபல ஊடகங்கள் ஏதும் கிடையாது. ஆர்வமிருப்பவர்கள் இணையம் மூலம் வேண்டிய தகவல்களை கண்டடையாலாம்.

இப்போது முதலீடு மற்றும் வர்த்தகம் என்றால் என்ன என்றும் அதன் இயல்புகளையும் பார்க்கலாம். இதைக் கொண்டு ஒரு தனிநபர் தான் தேர்ந்தெடுக்க  வேண்டியதை முடிவு செய்து கொள்ளலாம்.

முதலீடு(Investing):

முதலீடு எனும் சொல் பொதுவாக நமது வளத்தை (நேரம், நிதி போன்றவை) ஏதேனும் ஒன்றில் ஈடுபடுத்துவதை குறிக்கும். வணிக சொல்லாடல்களில் முதலீடு என்பது ஒரு தொழிலுக்காக செய்யப்படும் முதலீடு என்ற அர்த்ததிலேயே பயன்படுத்தப்படுகிறது. பங்குச் சந்தையை பொருத்தவரை ’முதலீடு’ எனும் சொல் அது பயன்படுத்தப்படும் இடத்தை பொருத்து நுட்பமான பொருள் வேறுபாடுகள் அடையும். இங்கு நான் முதலீடு (Investing) எனக் குறிப்பிடுவது வர்த்தகத்திற்கு (Trading) எதிர்பதமாகத்தான். அதாவது நீங்கள் பங்குச் சந்தையை எவ்வாறு அணுகுகிறீர்கள், முதலீடாகவா அல்லது வணிகமாகவா என்பதைக் குறிக்கிறது அது.

உதாரணம்: தங்கம், வீட்டுமனை போன்றவை. தங்கமும் வீட்டுமனைகளும் பயன்பாட்டு நோக்கத்திற்காகவும் வாங்கப்படுகின்றன. அவை முதலீடாகாது. குறிப்பிட்ட காலம் கழித்து விற்று லாபம் (நஷ்டம்!) அடையும் நோக்கில் வாங்கப்படுவதே முதலீடாகும்.

பங்குச் சந்தை முதலீட்டின் இயல்புகள் என்ன?

அ) Long Term: நீண்டகால நோக்கம் கொண்டது. குறைந்தது 6 மாதம் முதல் 5 வருடம் அல்லது அதற்கு மேலான கால அளவு இருக்கலாம்.

ஆ) Fundamental Analysis: ஒரு பங்கின் அடிப்படைகளை (Fundamentals) பொருத்து செய்யப்படுவதே முதலீடு. அதாவது நிறுவனத்தின் நிர்வாகம், காலாண்டு லாப/நஷ்ட கணக்குகள், எதிர்கால வாய்ப்புகள் போன்றவை. இந்த ஆய்வுக்கு Fundamental Analysis என்று பெயர். பெரும்பாலும் ஒரு பங்கின் தினசரி ஏற்ற இரக்கங்களுக்கும் இந்த அடிப்படைகளுக்கும் தொடர்பே இருக்காது. இருப்பினும் குறிப்பிட்ட காலம் கழித்து (குறைந்தது 6 மாதம்) திரும்பி பார்க்கையில், பங்கின் விலை என்பது அந்நிறுவனத்தின் அடிப்படைகள் பொறுத்தே நகர்ந்திருக்கும்.

இ) Anti-Volatile: விலையில் ஏற்படும் குறுகிய கால ஏற்ற இரக்கங்களை பொருட்படுத்தக் கூடாது. பங்கை வாங்கியதற்கான அடிப்படைகள் மாறாதவரை அதிலிருந்து வெளிவர வேண்டிய அவசியமில்லை.

ஈ) Surplus Capital: குறைந்தது 6 மாதத்திற்கு முதலீடு செய்யும் நிதி தேவைப்படாது என்றால் மட்டுமே இதில் ஈடுபட வேண்டும். கடன் பெற்றோ, அன்றாட செலவுகளுக்கான நிதியையோ நிச்சயம் பயன்படுத்தலாகாது.

உ) Low Risk - Low Return: சந்தையை தினசரி கவனிக்க முடியாதவர்கள், குறைந்த அளவு எதிர்பார்ப்புடன் குறைந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இதில் ஈடுபடலாம்.

Chart – historic CPI inflation India (yearly basis) – full term


நன்றி: http://www.inflation.eu/inflation-rates/india/historic-inflation/cpi-inflation-india.aspx

ஊ) Returns: எந்தவொரு முதலீட்டிற்கும் அடிப்படை தகுதி என்பது அது இயங்கும் பொருளாதார சூழலில் பணவீக்கத்திற்கு (Inflation) மேலான லாபத்தை தர வேண்டும் என்பதே. அப்போதுதான் அந்த முதலீட்டின் உள்ளார்ந்த (Intrinsic value) மதிப்பு துளியேனும் உயர்ந்ததாக அர்த்தப்படும். இந்தியாவில் பணவீக்க விகதம் வருடத்திற்கு 4 முதல் 12 சதவீதம் வரை வேறுபடும். சராசரியாக 8 சதம் என எடுத்துக் கொண்டால் அதற்கு மேலாக லாபம் தரும் எந்த முதலீடும் சிறந்ததே. சரியான முறையில் முதலீடு செய்தால் சந்தை வருடத்திற்கு 15 முதல் 20 சதம் லாபம் தர வல்லது. இது மிக முக்கியமானது. சந்தையை நீங்கள் முழுநேர தொழிலாக அல்லாமல் முதலீடாக அணுகும் பட்சத்தில் இந்த அளவுதான் (அதிகபட்சம் வருடத்திற்கு 20%) லாபத்தை எதிர்பார்க்கலாம்,  எதிர்பார்க்க வேண்டும்.

அடுத்த பதிவில் வர்த்தகம் (Trading) மற்றும் அதன் இயல்புகளை பார்க்கலாம்.

Tuesday, April 10, 2018

முன்னறிவும் கலைச்சொற்களும்

பங்குச் சந்தை சார்ந்து நான் உரையாட நேர்பவர்களிடம் தொடர்ச்சியாக இச்சிக்கலை கண்டு வருகிறேன். சந்தை குறிந்து அவர்கள் அறிந்தது, அறிந்ததாக நினைத்துக் கொண்டிருப்பது, எப்போதோ கேள்விப்பட்டது என எல்லாவற்றையும் வைத்து நம்மிடம் குத்துமதிப்பாக கேள்வி கேட்பார்கள். கேட்பதில் பிரச்சனையில்லை. ஆனால், பதில் மட்டும் அவர்களுக்கு சட்டென புரியும் வகையில் தெளிவாகவும் சந்தை குறித்து அவர்கள் முன்னரே அறிந்தவற்றோடு முரண்படாத வகையிலும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுதான் பிரச்சனை.


சந்தை என்று மட்டுமல்ல, எந்தவொரு புதிய துறை சார்ந்த விஷயங்களை நீங்கள் உண்மையாகவே கற்றுக்கொள்ள முனைந்தால் அத்துறை சார்ந்து முன்னரே தெளிவில்லாமலும் தவறாகவும் உங்களிடம் சேர்ந்திருக்கும் ‘முன்னறிவை’ துறக்க வேண்டும். தான் அழியாமல் கல்வி இல்லை.

குறிப்பாக நாம் அவ்வளவாக அறியாத ஒரு துறைசார்ந்த கலைச் சொற்களை (Keywords) பயன்படுத்தும் போது கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் கலைச் சொற்களின் அர்த்தம் என்பது அன்றாட புழங்கு தளத்தில் ஒன்றாகவும் அத்துறை சார்ந்த சொல்லாடல்களில் முற்றிலும் வேறான / நாம் எதிர்பார்க்காத அர்த்தத்தில் தொனிக்கும். கலைச் சொற்களை தெளிவாக வரையறுத்துக் கொள்வதென்பது அத்துறைசார்ந்த நமது அறிதலை வரையறுத்துக் கொள்வதே ஆகும். ஒருசிக்கலான இயந்திரத்தை கையாள உதவும் சிறுகருவி போல இச்சொற்களின் உதவி கொண்டே நாம் ஒரு அமைப்பை புரிந்து கொள்ளவும் அதனுள் பயனிக்கவும் இயலும்.

எனவே அவ்வப்போது சந்தை சார்ந்த கலைச் சொற்களின் அறிமுகத்தை இத்தளத்தில் பகிரலாம் என்றிருக்கிறேன்.

அதன் முதற்பகுதியாக பெரும்பாலானோர் தவறாகவும் போதிய கவனமில்லாமலும் சந்தை தொடர்பான சொல்லாடல்களில் பயன்படுத்தும் இரு சொற்களை இங்கு விளக்குகிறேன். முதலீடு (Investment) மற்றும் வர்த்தகம் (Trade).

(தொடரும்) 



Monday, April 9, 2018

நிம்மதி!

கவிஞர் இசையின் கவிதைகள் எனக்கு உலகியலின் பல சந்தர்பங்களை பகடியுடனும் அது அளிக்கும் தன்னம்பிக்கையுடனும் நோக்க உதவுபவை. வாழ்வை இலகுவாக எதிர்கொள்ளும் அவரது கவிதைகள் என்றும் எனக்கு அணுக்கமானது.

வாழ்வை நடத்தி செல்லும் போக்கில் பொருளியல் தேவை என்பது கட்டாயமாய் இருக்கிறது. எனக்கு பொருளியல் தேவைகள் என்பது கொசுத்தொல்லை போலத்தான். நாம் அதை பொருட்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் ஓர் எல்லைக்குமேல் நம்மால் சமாளிக்க முடியாது. எனவே பொருளியல் தேவை எனும் கொசுவை பொருட்படுத்தியே ஆக வேண்டும். சில சமயம் இந்த கொசு அடிக்கும் வேலையைகூட நாமே விரும்பி செய்வதாய், ரசனைக்குரியதாய் அமைத்துக் கொள்ளலாம். பங்குச் சந்தை வணிகம் எனக்கு அவ்வாறனதே.




ஆட்ட நாயகன்


புதிதாக ஒரு கொசுமட்டை  வாங்கியதிலிருந்து
நிம்மதியாக இருக்கிறேன்.
கொசு விரட்டிகள்
கொசுக்களை விரட்டி விடுகின்றன.
ஆனால்
மட்டை அவைகளை கொன்று தீர்க்கிறது.
ஒரு கொசு பறந்து போக
நானும் பறந்து போய்
சரியான வாகில் வைத்து ஒரே சாத்து
இன்பம் என் உள்ளத்தில் பட்” என்று தெறிக்கிறது.
பட்…  பட்…  பட்பட்பட்….”
இந்தக் கொசுமட்டை சமயங்களில் ஒரு  கோடாரி
ஈனப்பிறவிகள் என் காலடியில் கிடந்து
"தயை”…  "தயை”.. என்று கதறும்.
கதறலின் மண்டையில் ஓங்கி ஒரு போடு
எனது களம்...
எனது ஆட்டம்...
நானே நாயகன்
பிஸ்டலுக்கு எண்ணெய் போடுவது போலே
மட்டையில் மின்சாரம் ஏற்றுகிறேன்.

(ஆட்டுதி அமுதே! தொகுப்பிலிருந்து)

Saturday, April 7, 2018

ஐடியிலிருந்து பங்குச்சந்தைவரை - 3 (உறுதிமொழி)

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குமுன் நண்பன் மணவாளனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கு பிரசுரிக்கிறேன். இன்று திரும்பி பார்க்கையில் இக்கடிதத்தில் அளித்த உறுதிமொழியை சற்று தாமதமாகவேனும் நிறைவேற்ற முடிந்திருப்பதை எண்ணி நிறைவு கொள்கிறேன்.



நாள்: 
2/13/15


ரேண்டம்நஸும் ஒழுங்கும்


....எப்போதுமே பலனளிக்கக் கூடியது.
//

இம்மாதம் ஆரம்பம் முதல் சற்று பராவயில்லை. மனம் ஈடுபடுவதற்கு தீவிரமான ஏதோ ஒன்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படி ஏதும் சிக்கவில்லை என்றால் நிலமை பரிதாபம்தான். பங்கு சந்தையில் இம்மாதம் தீவிரமாக இருக்கிறேன். முன்பிருந்தே ஈடுபட்டு வருவதுதான். இருப்பினும் தற்போதுதான் பலன்தர ஆரம்பித்திருப்பதாக ஒரு உணர்வு. பணம் ஈட்ட வேண்டும் என்பது கூட அல்ல. அலுவலகத்தில் இருக்கும் போது ஏதோ ஒருவிதத்தில் ‘engaged’ஆக இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால் தண்ணீர், டீ குடிப்பதற்கும், கழிவரைக்கும், தினசரி படிப்பதற்கும் ஒட வேண்டியிருக்கும்.


இம்மாதம் இரண்டு வாரத்தில் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஈட்ட முடிந்தது பல கனவுகளை உசுப்பி விட்டுள்ளது. இவை தொடர் சாத்தியமா, நிலையானதா என்ற எந்த கேள்விக்கும் ஆம் என்றே சொல்லி வருகிறேன். ஒரு திட்டம் இருக்கிறது மணவாளன். இன்னும் ஆறு மாதத்திற்கு வேலையில் இருந்து கொண்டே பங்குசந்தை. அதில் தொடர்ந்து நிலைபெற்றிருக்க முடிந்தால் வேலையை விட்டுவிடுவதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடலாம். ’ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள்’.. இந்த வாசகமே என்னுள் ஓடிக் கொண்டிருக்கிறது.

நான் அவசரப்பட்டு இதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது நடக்குமா என்ற சந்தேகம் இருக்கும் வரையில் இதை எழுத வேண்டாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால், இதை எழுதுவதற்கான காரணமும் இதுவே. அதாவது எனக்குள் வெகுநாளாக இப்படி ஒரு ஒப்பந்தம் உள்ளது. உண்மையானது, நடந்தது, நடக்க கூடியது மட்டுமே எழுத முடியும். ஒருவேளை எழுதிவிட்டால் அதை உண்மையாக்குவதற்காகவேனும் நான் அதில் உறுதியாக இருக்க வேண்டும். இப்போதும் பெரும் சந்தேகத்துடனும், பல கேள்விகளுடனும்தான் இதை எழுதியிருக்கிறேன். இருப்பினும் இது தற்போது வரையறுக்கப்பட்டுவிட்ட ஒரு எண்ணம். முன்பைவிட மேலானது. திடமானது.


சரி வீட்டில் என்னவென்று சொல்வது?, சரி கிட்டத்தட்ட சொல்லியது தான்.
முதலில் இதை ஒரு தொழிலாக பிறரிடம் முன்வைக்க முடியுமா? எனக்கே இதை ஒரு தொழிலாக ஏற்றுக் கொள்வதில் சந்தேகம் இருக்கிறது. சரி இதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போதைக்கு பகலில் என்னை செலுத்துவது இதுவே. எண்கள்! மந்திரம் போல நான் திரும்ப திரும்ப உச்சரிக்கும் எண்கள். என்னையே அறியாமல் பலமுறை நான் திரையில் காண விரும்பும் எண்ணை அகத்தில் தொடர்ந்து ஓடவிட்டு இருந்திருக்கிறேன். நான் தொடர்ந்து வலியுறுத்தினால் அந்த எண் திரையில் வந்துவிடும் என்பது போல. எண்கள்! கூடிக் குறைபவை, எந்த பக்கம் என யூகிக்க முடியாதபடி கொஞ்ச நேரம் நிலைத்திருந்துவிட்டு, ஒரு பக்கமாக நிதானமாக பயணிக்க ஆரம்பித்து பழிப்புக் காட்டிவிட்டு பின்பு சரேலென்று
எதிர்திசையில் பயனிப்பவை. ஒரே நேரத்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்குமான வாய்ப்புகளும் தர்க்கங்களும் கொண்டவை.. கன நேரமும் எதிர்பாராத ஏதோவொன்றை நிகழ்த்தி சவாலுக்கு அழைப்பவை.

பங்கு சந்தை என்பது ஒரே நேரத்தில் ரேண்டம்நஸுடனும் ஒழுங்குடனும்
செயல்படும் ஒரு தளம். இரண்டும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே அதில்
தொடர்ந்து ஈடுஅடுவதற்கான ஊக்கத்தை அளிக்கிறது. அதிர்ஷ்டவசமாகவோ
துருதிர்ஷ்டவசமாகவோ பங்கு சந்தையும் வெளியில் அதிகம் அறியப்படாத தளம். இரவில் வாசிக்க ஆரம்பித்தால் ஒரு ரகசிய உலகிற்கு செல்லலாம். பகலில் இந்த உலகம். இவை இரண்டும் என்னை ஆட்கொள்வதால் லெளகீக தளத்தில் எதுவுமே சலனப்படுத்துவதில்லை. எது நடந்தாலும் ‘சரி, பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். நடக்கட்டும்’ என்கிற மனநிலைதான்.

//
உணவுக் கட்டுப்பாடு...

ஐடியிலிருந்து பங்குச்சந்தைவரை - 2 (வசீகரம்)


முருகேஷ் அண்ணன் எங்களைப் போலவே ஒரு பொறியியல் பட்டதாரி.  பழவந்தாங்கலில் நான் தங்கியிருந்த எட்டுபேர் கொண்ட பேச்சிலர் அறையில் பிற ஏழுபேரும் ஐடியில் வேலைபார்க்க அவர்மட்டும் இன்னதென்று தெளிவாக சொல்லிவிட முடியாத தொழிலில் அப்போது இருந்தார்.

அவர் எந்த அலுவலகத்திற்கும் செல்லவில்லை. ரயில்வே டிக்கெட் புக்கிங் மற்றும் பங்குச்சந்தை வணிகம், இவையே அவர் செய்துவந்த நடவடிக்கைகள். இணையத் தொடர்புடன் ஒரு மடிக்கணினியும் ஒரு கைபேசியும் மட்டுமே அவருக்கு போதுமானதாக இருந்தது. அவர் எந்த அலுவலகத்துக்கும் செல்லவில்லையெனினும் அறையில் இருப்பதிலேயே அவர்தான் மிகவும் பரபரப்பாகக் காணப்படுவார். குறிப்பாக காலை 9 மணிமுதல் 10 மணிவரை அவரது உச்ச நேரம். கைபேசியில் யாரிடமிருந்தோ ரயில் டிக்கெட் சார்ந்த தகவல்களை கேட்டபடிய்யோ அல்லது யாருக்கோ தகவல்களை சொல்லியபடியோ யாரையோ எதற்கோ அறிவுறுத்தியபடியோ காணப்படுவார். 

நாங்கள் இதையெல்லாம் பொறாமையுடன் கவனித்தபடியோ அல்லது கவனிக்காதவாறோ பாவனை செய்தபடி அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருப்போம். பொதுவாக ஐடியில் வேலைசெய்யும் அனைவருக்கும் தனது லட்சிய சுயதொழில் சார்ந்த பகற்கனவுகள் இருக்கும். அதுவும் திங்கட்கிழமை காலைகளில் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் எனும் நிதர்சனத்தை எதிர்கொள்ளும்போது முருகேஷ் அண்ணன், நாம் அந்த பகற்கனவுகளில் காணும் லட்சிய உருவாகவே காட்சியளிப்பார்.

வெளியில் யாரேனும் கேட்டால் டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட் என்றும் நெருங்கியவர்களிடம் மட்டும் பங்கு வணிகம் குறித்தும் சொல்வார். உண்மையில் பெரும்பாலான வணிகர்களைப் போலவே அவருக்கு அக்காலத்தில் பங்கு வணிகத்திலிருந்து பெரிதாக வருமானம் ஏதும் வந்திருக்கவில்லை. ஒருவகையில் சந்தை குறித்து அவரும் கற்றுக்கொண்டிருந்தார் என்றே சொல்லவேண்டும்.

அவர்மூலம்தான் சந்தை குறித்த அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவரைச் சந்தித்த அனேகமாக முதல் வாரத்திலேயே அவரிடம் ’இது’ என்ன என கேட்க ஆரம்பித்திருந்தேன். ‘இது’ என்பது அவர் வினோதமாக திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் மின்னி மறையும் எண்களும் சிக்கலானது எனத் தோற்றமளிக்கக் கூடிய பல்வேறு வடிவங்கள் கொண்ட சார்ட்டுகளும். சந்தை இயங்கும் விதம் குறித்த அடிப்படையான புரிதல் சிறிது நாட்களில் உருவானது. முக்கியமான மூன்று அடிப்படை அறிதல்களை இங்கு சொல்கிறேன்: 

அ) பெரும்பாலானோர் நினைப்பதுபோல சந்தை ஒருவகை சூதாட்டமோ, செல்வம் இறைக்கும் மந்திர பெட்டியோ அல்ல.

ஆ) அனைத்து தொழில்களையும் போலவே சந்தையில் வெற்றியடைவதற்கும் அந்த களம் குறித்த அறிதல், தொடர் ஈடுபாடு, தொடர் பயிற்சி ஆகியவை அவசியம்

இ) ஒட்டுமொத்தமாக சந்தை இயங்கும் விதத்திலிருந்து ஒரு தனிப்பட்ட வணிகம் இயங்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது.

அதன்பிறகு சந்தையை நாள்தோறும் தொடர்ந்ததும் இணையத்தில் அதுகுறித்து தேடித்தேடி வாசித்ததும் எனக்கே ஆச்சர்யமான விஷயங்கள். உள்ளூர நான் சந்தையை கவனிப்பவன் (வணிகம் செய்பவன் என்றல்ல) என்ற பிரக்ஞை உருவாகிவிட்டிருந்தது. ஒருவேளை எனது வேலைச்சூழல் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சந்தை வசீகரிப்பதாய் இருந்து வந்துள்ளது என்றே நினைக்கிறேன். அது அளிக்கும் சவால்களால் சீண்டப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் களத்திற்கு வருவதைக் காண்கிறேன். நானும் அவ்வாறு சீண்டப்பட்டவனே. இதிலிருந்த விடுபட ஒரேவழிதான் உள்ளது. சந்தை அளிக்கும் சவால்களை ஏற்றுக் கொள்ளலாம், தவறில்லை. ஆனால் சந்தை மீதான முழுவெற்றி ஒருபோதும் சாத்தியமில்லை என்ற தன்னுணர்வும் எப்போதும் இருக்க வேண்டும்.


சந்தையின் இந்த வசீகரம் குறித்து அவ்வப்போது நானே அஞ்சுவதுண்டு. ஒருவேளை இதிலிருந்து எனக்கு மீட்பேயில்லையா என்றும் இது எனது வாழ்வையும் தேர்வுகளையும் கட்டுப்படுத்துகிறதா என்றும் சந்தேகிக்கும் தருணங்கள் உண்டு. இப்போதைக்கு என் புரிதல் என்னவென்றால் நாம் பூணும் வேடங்களை தெளிவாக பகுத்துக் கொள்வதொன்றே வழி. பங்கு சந்தை வியாபாரி எனும் எனதிந்த வேடம் முழுக்க முழுக்க லெளகீக தளம் சார்ந்தது. சந்தையின் ஆடல்கள் எத்தனை ஆழம் மிக்கதாய் தோற்றமளித்தாலும் நான் தேடுவதற்கோ அடைவதற்கோ இங்கு எதுவும் இல்லை. எனவே ஒருபோதும் என் அகம் சார்ந்த தேடல்கலையோ தேர்வகளையோ இத்தொழில் பாதிக்கலாகாது என்ற சுயபிரகடனத்தை கண்டிப்பாக இட்டுக் கொண்டுள்ளேன்.

Wednesday, April 4, 2018

ஐடியிலிருந்து பங்குச்சந்தைவரை - 1 (அந்நியமாதல்)

பங்கு சந்தையில் வணிகம் செய்யும் ஒருவரை நான் முதன்முதல்லாக சந்திப்பது 2013 அக்டோபரில். என் 23ஆவது வயதில். கல்லூரி முடித்து ஒருவருடம் கழிந்த பின்னர் நான் எனது முதல் வேலையில் சேர்ந்து அப்போதுதான் ஆறு மாதம் ஆகியிருந்தது. ஐடி வேலையில் இருந்து என்னை நானே மீட்டுக் கொள்வது எவ்வாறு என தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த காலம். சந்தை எனக்கு அறிமுகமான அனுபவத்தை சொல்லும்முன் அன்றைய சூழலில் நான் பார்த்துவந்த ஐடி வேலை குறித்து என் மனநிலையை சொல்லியாக வேண்டும்.


சென்னையில் காக்னிசண்ட் எனும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை. எனக்கு விருப்பமே இல்லாத டெஸ்டிங் துறையில் நான் வேலை செய்வதாக நிர்ணயிக்கப்பட்டு அதற்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இருப்பதிலேயே டெஸ்டிங் துறையில் தான் வேலைப்பளு குறைவு என்று சொல்வார்கள். ஆனால் அன்றைய சூழலில் டெஸ்டிங் துறை என்பது புதிதாக ஐடி வேலையில் நுழைபவர்களால் ஒருபடி கீழானதாகவே பார்க்கப்பட்டது. காரணம் டெஸ்டிங் துறை ஒப்புநோக்க திறன் குறைவானவர்களுக்கானது என்ற எண்ணம். ஐடியில் முக்கிய திறனாக கருதப்படும் programming skill இத்துறைக்கு தேவையில்லை என்று பொதுவாக நம்பப்பட்டதால் ‘லட்சிய’ ஐடி ஊழியன் எவனும் டெஸ்டிங் துறையை உயர்வாக எண்ணவில்லை. வேலைக்கு புதிதாக சேர்ந்த காலத்தில் அனைவருமே லட்சிய ஊழியர்கள்தான் என்பதால் நானும் அப்பாவனையை மேற்கொண்டேன்.


மேலும் ஐடி வேலையே ஒருவகை இரண்டாம்தர வேலைதான் என்ற பிம்பம் எனது கல்லூரி சூழலிலேயே ஏற்பட்டிருந்தது. இயந்திரவியல், மின்னனுவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களிடம் இந்த மனப்பான்மையை காணலாம். நான் படித்தது இயந்திரமின்னனுவியல் (Mechatronics) பிரிவு. அன்றெல்லாம் ’படித்த படிப்பு சார்ந்த துறையில் வேலை செய்வதே சரியானது/உயர்ந்தது’ என்ற பிழையான கற்பிதம் மாணவர்களிடம் பரவலாக நிலவியது. குறிப்பாக பிறதுறை மாணவர்கள் ஐடியில் வேலைக்கு சேர்வதென்பது ஒருவகை சரணடைதலாகவே பார்க்கப்பட்டது. உண்மையில் பிற துறைகளில் அத்தனை பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பும் இருக்கவில்லை. ஆனால் இந்த நிதர்சனத்தை புரிந்துகொள்ளும் முதிர்வு அன்றைக்கு எங்களில் பெரும்பாலானோருக்கு இருக்கவில்லை. இது ஒருவகையில் விசித்திரமானது. ஒரு சராசரி இயந்திரவியல் மாணவனுக்கு அவனது துறை அடிப்படைகள் குறித்து எதுவும் தெரிந்திருக்காது, ஆனால் ஐடி வேலை ஆகாது, கோர் கம்பெனிதான் கெத்து என்பான். கோர் கம்பெனியின் வேலை சூழல் குறித்த தெளிவோ அந்த வேலையை அடைவதற்கான திறன் வளர்ப்போ இல்லாமல் ஐடி வேலையை விமர்சிப்பதன் ஊடாக மட்டுமே ’லட்சிய பொறியாளன்’ என்கிற பிம்பத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இவையெல்லாம் கல்லூரி முடிவடைவதற்கு ஒரு மூன்றுமாதம் முன்புவரை மட்டுமே. மெல்ல மெல்ல மனநிலை மாறுபடுவதை காணலாம். இறுதி தேர்வுகள் முடிவடையும்போது  ஐடி தவிர நமக்கு வேறு போக்கிடம் கிடையாது என்ற நிலை கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும்.


இதுபோக நமது சூழலில் பொதுவாக ஐடிகுறித்து இருக்கும் விந்தையான எதிர் மனநிலை. இங்கு பெரும்பாலானோருக்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனமொன்றில் வேலைபார்த்து வார இறுதியில் மாலுக்கு செல்வதென்பது உள்ளூர கொண்டிருக்கும் லட்சியக் கனவு. ஆனால் பொதுவெளியில் ஐடி ஊழியர்கள் அனைவரும் அமேரிக்க அடிமைகள் என்றும் சொல்லியாக வேண்டும். ’அங்கெல்லாம் ஸ்ட்ரெஸ்ஸ் அதிகமாமே’ என பச்சாதபப்படும் பக்கத்துவீட்டு ஆண்டி ஒரு ரகம் என்றால்,  ‘எப்பவேனா வேலையவிட்டு தூக்கிடுவாங்க்லாமே?’ என நமக்காக இரக்கப்பட்டு மாற்று தொழில்/ வேலைவாய்ப்பு யோசனைகள் சொல்லும் சலூன் கடைக்காரர் இன்னொரு ரகம்.


இவ்வாறு கல்லூரி சூழலிலும் சரி, பொது வெளியிலும் சரி, ஐடி வேலை என்பது நடைமுறை உண்மை என தெரிந்தாலும் போலியான லட்சிய பாவனைகள் காரணமாக அது இரண்டாம்தரமாக பார்க்கப்பட்டது.




இம்மாதிரி பொது மனநிலைகள் குறித்து எனக்கு எப்போதுமே சந்தேகம் இருந்து வந்தது என்றாலும் ஐடி வேலை என்பது தனிப்பட்ட முறையில் என் இயல்புக்கு ஒத்துவராது என்ற எண்ணம் எனக்கு முன்னரே இருந்தது. அது ஒருவகையில் சராசரிகளின் லட்சிய வேலை என்பதாலேயே என்னை அதனுடன் பொருத்திக் கொள்வது சரியாகப் படவில்லை. அந்த வேலையில் தொடர்ந்தால் எனக்கு விருப்பமில்லாத நுகர்வு சார்ந்த வாழ்வை வாழ நேரிடும் என நினைத்தேன். கைநிறைய சம்பளத்துடன் புறநகரில் வீடுவாங்கி ‘செட்டில்’ ஆவதென்பது அசடுகளின் செயல் என்றும் பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, இம்மாதிரி ‘செட்டில்’ ஆகிவிடக்கூடாது என்கிற உணர்வு எப்போதும் இருந்து வந்தது.


அதேசமயம் கல்விக் கடன், வீட்டுக் கடன் போன்ற பொருளியல் கடமைகள் எனக்கு இருந்ததால் அன்றைய சூழலில் நிலையான வருமானம் தரும் ஐடி வேலை எனக்கு இன்றியமையாததாக இருந்தது. எனவே வருமானத்திற்கான மாற்று வாய்ப்புகளை உருவாக்கி கொள்ளும்வரை அல்லது குறைந்தபட்சம் கடன்களை அடைக்கும்வரை அவ்வேலையில் தொடர்வர்தெனும் முடிவில் இருந்தேன்.


இச்சூழலில்தான் பங்கு சந்தை குறித்த அறிமுகம் சென்னை, பழவந்தாங்கலில் நான் தங்கியிருந்த பேச்சிலர் அறையில் கிடைத்தது. அதுவரை சென்செக்ஸ் நிஃப்டி போன்ற வார்த்தைகளுக்குகூட எனக்கு அர்த்தம் தெரியாது. ஆச்சர்யம்தான். பங்குசந்தை சார்ந்த செய்தி துணுக்குகளை சூழல் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கிறது. செய்தித்தாள்களில் நடுப்பக்கத்திற்கு அடுத்த இடதிலும், தொலைக்காட்சி செய்திகளில் விளையாட்டுக்கு முன்பாகவும் பங்கு சந்தைக்கு கட்டாயம் இடம் உண்டு. அதற்க்கென்றே பிரத்யேகமான செய்தி சானல்களும் உண்டு (இவை எதுவும் சந்தையை புரிந்துகொள்ள இம்மிகூட உதவாது என்பது வேறுவிஷயம்). ஆனால் சந்தை எவ்வாறு செயல்படுகிறதென்ற தோராயாமான புரிதலோ அதுகுறித்த பிரக்ஞையோ பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. மிகச்சிலரே அதுகுறித்து கவனம்கொண்டு புரிந்துகொள்ள முயற்சி செய்து தவறான புரிதலுடன் இருப்பார்கள். ஆம் அதுபற்றி தெரிந்து கொள்வது பெரும்பான்மைக்கு அவசியமில்லைதான். ஆனால் தினசரி நம் பார்வையில் பட்டுக் கொண்டேயிருக்கும் ஒரு விஷயம் குறித்து நாம் முழு அறியாமையுடன் இருப்பது ஒரு புரிதலை அளித்தது. நாள்தோறும் நம் பார்வையில் பட்டுக் கொண்டே இருக்கும் அதேசமயம் நம் கவனத்தில் வராத பலநூறு விஷயங்கள் இருக்கலாம். ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தனி உலகமே செயல்பட்டுக் கொண்டிருக்கலாம். அப்படி ஓர் உலகம் எனக்கு அறிமுகம் ஆன விதம் குறித்து அடுத்த பதிவில்.

Monday, April 2, 2018

வணிகப் பதிவேடு


இனி பங்குசந்தையில் நான் மேற்கொள்ளும் அனைத்து வணிகங்களையும், வணிகம் செய்த நேரம், விலை, லாப/நஷ்டம் உள்ளிட்ட முழு விவரங்களுடன் இந்த கூகுள் ஷீட்டில் பதிவு செய்வதாய் உள்ளேன்.

முடித்து வைக்கப்பட்ட வணிகங்கள் மட்டுமில்லாமல் தினசரி நடப்பில் இருக்கும் வணிகங்களை நடப்பில் இருக்கும்போதே பதிவு செய்ய முயற்சிக்கிறேன். இதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் இணைய தொடர்பு மற்றும் என் மனநிலை சார்ந்து மாறுபடலாம்.

இப்பதிவேட்டின் முக்கிய நோக்கம், இனி செய்யப் போகும் அனைத்து வணிகங்களும் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதே. குறிப்பாக நஷ்டம் ஏற்படுத்திய வணிகங்கள், கைதவறுதலாக செய்த வணிகங்கள் உள்ளிட்ட அனைத்தும்.

வணிகப் பதிவேடு

விசித்திர புத்தாண்டு - ஒரு தொடக்கம்

நேற்று இரவு திடீரென ஓர் எண்ணம். நாளை முதல் எனக்கான புதிய ஆண்டு தொடங்குகிறது என. அதாவது புதிய நிதியாண்டு (ஏப்ரல் 2018) தொடங்குவதைத்தான் அப்படி நினைத்துக் கொண்டேன். இதுவரையிலான எனது வாழ்வில் பல நிதியாண்டுகள் கடந்து போயிருந்தாலும், முதன்முறையாக அதை ஒரு புத்தாண்டாக அணுகும் அளவுக்கு மனம் அதுகுறித்த பிரக்ஞையுடன் இருந்தது எனக்கே விசித்திரமாக இருந்தது.


இதற்கான காரணம் தெளிவானது. குறைந்தது கடந்த மூன்றரை ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தையை அனேகமாக அது செயல்பட்ட அனைத்து நாட்களிலும் கவனித்து வந்திருக்கிறேன். சிறிய இடைவெளிகள் தவிர பெரும்பாலான நாட்களில் சிறிய அளவிலேனும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறேன். குறிப்பாக எனது ஐடி வேலையை விட்ட பிறகு கடந்த நான்கு மாதங்களாக பங்கு சந்தை வணிகத்தை மட்டுமே எனது பொருளியல் வாழ்வுக்கான அடிப்படையாக வகுத்துக் கொண்டிருக்கிறேன். நான் ஏதேனும் ஒரு தொழில் குறித்து உறுதியாக சில கருத்துகள் சொல்ல இயலும் என்றால் அது பங்கு வர்த்தகம் குறித்தே. எனவே மனம் அதுகுறித்த விழிப்புடன் இருந்ததில் ஆச்சரியமில்லை.


கடந்த நவம்பர் இறுதியில் இம்முடிவை எடுக்கும் போதே நான்கு மாதங்கள் கழித்து எனது பங்கு வர்த்தகத்தில், அதையே பிரதான தொழிலாக கைக்கொள்ளும் முடிவில் எந்தளவு முன்னேற்றம் அடைந்திருக்கிறேன் என்பதை தீவிரமாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என எண்ணியிருந்த்தேன். மார்ச் மாதத்துடன் நான்குமாதம் நிறைவடைந்தது. இந்த சோதனை காலகட்டத்தின் முடிவகள் எனக்கு ஊக்கமளிப்பதாகவே உள்ளது. மேலும் பங்கு வர்த்தகத்தையே எனது பொருளியல் வாழ்வுக்கான அடிப்படையாகக் கொள்ளலாம் எனும் எண்ணம் இன்றைய நிலையில் மேலும் வலுவாக உள்ளது. இந்த சோதனை காலகட்டம் குறித்த விரிவான முடிவுகளை பின்னர் எழுதுகிறேன்.



சரி, இந்த நிதியாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என எண்ணிக்கொண்டேன். இனி பங்கு சந்தை குறித்த எனது அனுபவங்கள் இங்கு பதியப்படும். இது முக்கியமாக இத்தொழிலில் எனது வளர்ச்சிப்போக்கை நானே அவதானிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வலைப்பூவின் பிரதான நோக்கமே அதுதான்.


எனது வாசிப்பு, பயணம், அனுபவங்கள் குறித்து தனியாக ஒரு வலைப்பூ தொடங்கும் எண்ணமுள்ளது. இங்கு எனது பங்குசந்தை அனுபவங்கள் குறித்து மட்டும்..

முதலீடு X வர்த்தகம்

நமது சாத்தியங்களும் தேவைகளுமே நமக்கான இலக்கையும் பாதைகளையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் சந்தை குறித்த நமது எதிர்பார்ப்ப்புகள் என்ன அதை...